WELCOME
ASSALAMU ALAIKUM WR WB...
Friday, September 6, 2013
இதுவா படைப்பு சுதந்திரம்?
By ஜெயபாஸ்கரன்
First Published : 07 September 2013 01:25 AM IST
ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் - அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன.
ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் - அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக இருக்கும்பட்சத்தில் அவை ரசிக்கப்படுகின்றன, விலைகொடுத்து வாங்கப்படுகின்றன, கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு வணங்கப்படுகின்றன.
ஒரு படைப்பாளி பெருங்கதை புனைபவனாக இருந்தால் - அவனது கதாபாத்திரங்கள் அறம் உரைப்பவையாக, மானுட வாழ்வியலை உணர்த்துபவையாக இருந்தால், அவை உயிருள்ள பாத்திரங்களாகவே உணரப்பட்டு உதாரணபுருஷர்களாக்கப்படுகின்றன. அவ்வகையில்தான் என்றைக்கோ எழுதப்பட்ட பல்வேறு வகையான இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் இன்றைக்கும் நம்முடன் உணர்வுபூர்வமாக உறவாடிக் கொண்டிருக்கின்றன.
நாவல் இலக்கிய உலகில் கதை மாந்தர்களாக வார்க்கப்பட்ட குறிஞ்சி மலர் "அரவிந்தன்', பொன்னியின் செல்வன் "வந்தியத்தேவன்', புத்துயிர்ப்பு "நெஹ்லூதவ்' போன்ற பல உன்னத கதாபாத்திரங்களை நாம் பட்டியலிட முடியும். போற்றிப் பின்பற்ற மட்டுமல்ல, எவரும் பின்பற்றக் கூடாத எச்சரிக்கைகளாகவும் சில கதாபாத்திரங்கள் வார்க்கப்படுவது உண்டு.
அந்தவகையில் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திர வார்ப்புகளில் மிகப்பெரியதொரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இன்றைய திரைப்படங்களின் கதாநாயகர்களாக படைக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் குதர்க்கவாதம் செய்கிறார்கள். கூச்சம் எதுவுமற்று குழுவாகச் சேர்ந்து மது குடிக்கிறார்கள். பேசிக்கொண்டே சிகரெட்டைப் பற்றவைத்து, புகைப்பது என்பது வாழ்வியலோடு இரண்டறக் கலந்திருக்க வேண்டிய இயல்பான நடைமுறையென்று மறைமுகமாக உணர்த்துகிறார்கள். பெற்றோருக்கும் குடும்ப உறவுகளுக்கும் எவ்வகையிலும் கட்டுப்பட மறுக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகளில் படிப்பதாகக் காட்டப்பட்டால், அங்கு படிப்பது ஒன்றைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள். குறிப்பாக, பெண்களை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார்கள். தங்களது ஆசிரியர்கள் உள்பட அனைவரையும் கேலி செய்கிறார்கள்.
எதைச் செய்தேனும் "எடுபட்டு' விடவேண்டும், "பெருவெற்றி' பெற வேண்டும் என்கிற வணிக வலுக்கட்டாயமே தமிழ்த் திரையின் படைப்பாளிகளை இப்படியான கதாபாத்திரங்களை படைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இளவயது ஆண்களையும், பெண்களையும், மாணவ மாணவிகளையும் ஈர்த்து, திரையரங்கில் அவர்களைக் கைதட்டவைத்துப் பெருங்குரலில் சிரிக்கவும் வைத்துவிட்டால் நமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்கிற படைப்பாளிகளின் மனோ நிலையே இன்றைய "திரை'யின் கதாபாத்திர வார்ப்புகள் பெருவீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
நமது சமூகத்தில் பிள்ளைகள் பதின்மவயதை அடையும்வரை அவர்களால் பெற்றோர்களுக்கு எத்தகைய சமூக இடர்பாடுகளும் நேர்வதில்லை. அதற்குப்பிறகு அதாவது பதிமூன்று வயது தொடங்கி ஏறக்குறைய இருபத்தைந்து வயதுவரை பெற்றோர்களுக்கு ஒவ்வாதவர்களாக மாறுகின்றனர். இன்று மிக எளிதாக வசப்பட்டு விட்ட அலைபேசி, இணையம், முகநூல் போன்ற தகவல் தொடர்பு ஊடக வசதிகள் இன்றைய பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறவுகளோடு பேச விருப்பமற்றவர்களாக மாற்றிவிட்டன. அவர்களின் எதிர்கால வாழ்க்கை நலமாக அமைய வேண்டும் என்று கவலையுற்று கருத்து தெரிவிக்கிற, அல்லது கண்டிப்பு காட்டுகிற குடும்ப உறவுகளை, தங்கள் மகிழ்ச்சிக்கு எதிரானவர்களாகக் கருதத் தொடங்கியுள்ளனர்.
இன்றைய நமது பிள்ளைகள், பெற்றோர்களின் கருத்துகளுக்கும், கண்டிப்புகளுக்கும், அதற்கு முற்றிலும் எதிரான திரைக் கதாநாயகர்களின் தூண்டுதல்களுக்கும் இடையில் அகப்பட்டு அல்லற்படுகின்றனர்.
எதை எதை எடுத்துச் சொன்னால் இளையோரும் மாணவரும் உடனடியாக கேட்டுக்கொள்வார்களோ அதை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதிலும், எதை எதை எடுத்துக் காட்டினால் அவர்கள் பரவசப்பெருக்கடைந்து பார்ப்பார்களோ அதை மட்டுமே காட்ட வேண்டும் என்பதிலும், யார் யாரை தங்களுக்கு ஒவ்வாதவர்களாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறிவைத்துக் கேலி செய்கிற வேலையை மட்டுமே செய்யவேண்டும் என்பதிலும் இன்றைய நமது திரைப்படைப்பாளிகள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். போக்கிரித்தனங்கள் நிறைந்தவனாக, பொறுப்பற்றவனாக, குடிகாரனாக, உழைப்பதற்கு விருப்பமற்றவனாக, தனக்கு எவ்வகையிலும் பொருந்தாத தெருச்சண்டைகளில் பலரோடு மோதி வெல்பவனாக, வலிய வலியச் சென்று காதலிப்பவனாக சித்திரிக்கப்படுகிற ஒரு திரைப்பாத்திரம், அதுபோன்ற உணர்வுப் போக்குடைய இளைஞர்களுக்கான வலிமையான மறைமுக அங்கீகாரமின்றி, வேறு என்ன?
தங்களது பிள்ளைகள் நன்றாகப் படிக்கவேண்டும், படிப்புக்கேற்ற வேலைகளைப் பெற்று அவர்களின் வாழ்வு நலமாக அமையவேண்டும் என்பதுதான் நமது சமூகத்தில் பிள்ளைகளைப் பெற்ற அனைவரும் காண்கின்ற பெருங்கனவாகும். ஆனால், அவர்களது கனவுகளுக்கு முற்றிலும் முரணான குணக்கூறுகளைக் கொண்டவர்களைத்தான் அவர்களது பிள்ளைகள் திரையரங்குகளில் கதாநாயகன்களின் வடிவில் பார்த்து ரசித்துப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசக்கின்ற ஒரு நிஜமாகும்.
குடும்பம் எனும் அமைப்பும் விதம் விதமான பணிப் பயிற்சி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து பெரும் பொருள்செலவில் ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு வடிவமைத்து உருவாக்கிவரும் இளைய சமுதாயச் சக்திகளை, அவர்களுக்கு வெளியே இருக்கிற ஓர் ஊடகம் ஒரே நாளில் மாற்றிவிடுகிறது. மது அருந்தக் கூடாது என்பதை எழுத்துகளின் வாயிலாகவும், வார்த்தைகளின் வாயிலாகவும் வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும் சமூகவியலாளர்கள், மது அருந்தும் காட்சிகளை விதம்விதமான கோணங்களில் வண்ணமயமாக ஒளி ஒலி காட்சிகளாகக் காட்டுகிறவர்களிடம் பரிதாபமாகத் தோற்றுவிடுகின்றனர்.
மது, புகை, வெட்டுக்குத்து வன்முறை, போக்கிரிக் கலாசாரம், பொத்தாம் பொதுவான பொறுப்பற்ற பகடித்தனங்கள் போன்ற அனைத்துக் கூறுகளுக்குமான மறைமுகமான விளம்பரப் பொதுமேடையாகவும் அவற்றையெல்லாம் உரத்த குரலில் அங்கீகரிக்கும் நிறுவனமாகவும் இன்றைய நமது தமிழ்த்திரை மாற்றப்பட்டுவிட்டது. இந்தக் கூறுகளோடு காதல் கவர்ச்சி போதையையும் போதுமான அளவுக்குக் கலந்து தந்து அது தன் வணிகத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது. திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்துவிட்டு அவற்றில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சுயத்தோடு விளங்குகிறவர்களாக நமது பெரும்பான்மை மக்கள் இல்லை.
ஓர் இளைஞன் நல்ல தகுதிகள் ஏதுமற்றவனாக இருந்தாலும்கூட அவன் தான் சந்திக்கும் பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கும் தகுதியை மட்டும் உடையவனாக இருக்கிறான் என்பதே கடந்த சில ஆண்டுகளாக நமது தமிழ்த்திரையுலகம் தமது கதாபாத்திரங்களின் வாயிலாக முன்வைக்கும் ஆணித்தரமான கருத்தாக இருக்கிறது.
உலகின் எந்த நாட்டுத் திரையுலகமும் காதலைப் பிடித்துக்கொண்டு இதுபோன்ற ஆட்டங்களை ஆடுவதில்லை. சில கோயில்களில் பம்பையும் உடுக்கையும் சேர்ந்து பரவசம் மிகுந்த இசையை வேகவேகமாக எழுப்பி சன்னதம் வந்து ஆடும் சாமியாடிகளை உருவாக்குவது போல, நமது தமிழ்த் திரைப்படங்கள் காதல் உடுக்கையை வேக வேகமாக அடித்து அடித்து காதல் சாமியாடிகளை உருவாக்கி அவர்களை வெறி நடனமாடி வீதி உலா வரச் செய்கின்றன. வேதனை மிகுந்த இத்தகைய போக்குகளின் விளைவுகளைத்தான் நம் சமூகம் அனுபவித்து வருகிறது. பெற்றோரும் அனுபவித்து வருகின்றனர். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்தால் நமது தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவுக் கருவிகள், ஒலிப்பதிவுக் கூடங்கள், பாடல் பதிவுக் கூடங்கள் என ஒவ்வொன்றும் காதல் உணர்வு ஊற்றெடுக்கப் பயன்படுத்தப்படும் உடுக்கைகளாகவே தெரிகின்றன.
சிந்திக்கிற - படிக்கிற, மக்கள் குறைவாகவும், பார்க்கிற - கேட்கிற மக்கள் பெருவாரியாகவும் இருக்கிற நமது சமூகத்தில், அதிலும் படிக்கிற மக்களே கூட பார்க்கிற - கேட்கிற கலாசாரத்திற்குத் தங்களைப் பழகிக்கொண்டுவிட்ட இன்றைய சூழலில் ஊடகங்களிலேயே பெரும் ஊடகமாக } குறிப்பாக அனைத்து ஊடகங்களுக்கும் தாய் ஊடகமாக } நிலைபெற்றுவிட்ட திரைப்படத்தின் சமூகப்பொறுப்பு எத்தகையது என்பது உள்ளார்ந்த அக்கறையோடும், தொலைநோக்கு பார்வைகளோடும் உணரப்படவில்லை. ஒரு அபத்தத்தை எழுதுவதும், பேசி நடிப்பதும், வடிவமைப்பதும் ஒரே ஒரு முறைதான் நடக்கிறது. ஆனால், அந்த அபத்தம் எத்தனை ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் வெளியாகி மக்கள் மனதில் திணிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது என்பதை ஊடக உலகம் நினைத்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.
செய்ய வேண்டியவற்றைச் செய்வதைக் காட்டிலும், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல் இருப்பதுதான் மனிதகுலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு அடிகோலும். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நம் தமிழ்த் திரையுலகம் எதை எதைச் செய்து கொண்டிருக்கிறது, எதை எதைச் செய்யாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். படைப்பாளிகளுக்கு இருக்கும் படைப்புரிமை என்பது சமூகத்தைப் பாழ்படுத்தும் உரிமையாக மாறலாகாது!
கட்டுரையாளர்: கவிஞர்.
Wednesday, July 17, 2013
சிறப்பெது கேட்பின்...
By பிரபா ஸ்ரீதேவன்
First Published : 22 June 2013 01:37 AM IST
ஒவ்வொரு நாட்டின் மக்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும் என்கிறார்கள். அமெரிக்கர்கள் உடனே நட்புடன் சேர்ந்து மகிழ்வார்கள், ஆங்கிலேயர்கள் எளிதில் தங்கள் உணர்ச்சிகளைக் காட்ட மாட்டார்கள். ஜெர்மானியர் எதிலும் ஒரு கட்டுப்பாடு, பிரெஞ்சு நாட்டினருக்குக் கலையுணர்வு, இத்தாலியர் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். தெரியாது... நம் மக்களுக்கு யோசித்துப் பார்த்தேன் ம்ம்ம் இல்லை... நமக்கு... ம்ம் பார்ப்போம்.
பிப்ரவரி மாதம் ஹாலந்து நாட்டில் "திஹேக்' என்னும் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. பாலியல் வன்முறைபற்றி பல நாட்டின் நீதிமன்றங்களும், சர்வதேச நீதிமன்றங்களும் எப்படி நோக்குகின்றன என்று பல கோணங்களில் ஆராயும் ஒரு கலந்துரையாடல். அந்த ஊரில் சுற்றிப்பார்க்க எங்கு போகலாம் என்று யோசித்துப் பார்த்தபொழுது - உலகிலேயே மிகப்பெரிய - பூக்களை ஏலம் எடுக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
பிரமிக்க வைக்கும் இடம். அடுக்கடுக்காய் வண்ண வண்ணப் பூக்கள். நம்மை ஓர் உயரமான இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கிருந்து பார்க்கலாம். கண்ணாடி ஜன்னல்கள் பொருந்திய இரு அறைகள் - அங்குதான் ஏலம் நடக்கும். வண்டி வண்டியாய் பூக்கள் சுழன்று வரும். அதைப் பார்த்து ஏலம் எடுப்பவர்கள், தாங்கள் ஏலம் எடுக்கும் தொகையைக் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்வார்கள்; அதுவல்ல பிரமிப்பு. அங்கு மேலேயிருந்து அடுக்கடுக்காய் பூக்கள் பார்த்தோமே, அந்த இடம், பெரிய விளையாட்டு மைதானம்போல பரப்பளவு.
"பேட்டரி'யால் இயங்கும் வண்டிகளில் இங்கும் அங்கும் ஓட்டிச்சென்று பூக்களை எடுத்து நகர்த்தி அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். அரை மணி நேரம் பார்த்திருப்போம். நாங்கள் ரொம்ப உயரத்தில் - அவர்களுக்குத் தெரியாது நாங்கள் இருப்பது. 15 - 20 வண்டிகள் இருந்திருக்கும், ஓட்டுபவர்களும் அடுக்குபவர்களுமாக மொத்தம் இருநூறு பேர்கள் இருந்திருப்பார்கள்.
ஒருவரும் நின்று அரட்டையடிக்கவில்லை. டீ, காபி குடிக்கப் போகவில்லை. கருமமே கண்ணாயிருந்தார்கள். அட! ஒரு செல்போனில்கூட ஒருவரும் பேசவில்லை. அதிசயமாக இல்லை? இப்படி ஓயாமல் ஒழியாமல் அவரவர்கள் தமக்கு இட்ட வேலையைச் செய்தோமானால் நம் நாடு என்றோ வல்லரசாகியிருக்கும்.
அது பணக்கார நாடு, குளுகுளு அவர்களுக்கென்ன? நம் கதை வேறு என்கிறீர்களா? அடுத்து பிரேசில் நாட்டுக்குச் செல்வோம். பிரேசில், இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகள். அங்கு மனித உரிமைகள் பற்றிய மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். மாநாடு முடிந்தபின், ஒரு நாள் நான் மட்டும் தனியாக இருந்தேன். என்னுடன் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ரையோடி ஜனீரோ நகரத்தைப் பார்க்கப் போய்விட்டார்கள்.
பிரேஸிலியா நகரத்தின் அருகே ஒரு நீர்வீழ்ச்சி இருப்பதாகச் சொன்னார்கள். சரி போவோம் என்று ஒரு வாடகை வண்டியெடுத்துச் சென்றேன். ஓட்டுநர் தன் நாட்டைப் பற்றியும் அதன் பெருமையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டு வந்தார். அங்கு சென்றதும், என்னை நீர்வீழ்ச்சிக்கு அருகே அழைத்துச்சென்று, தான் வண்டிகளை நிறுத்துமிடத்தில் இருப்பதாகவும் நான் நிதானமாக வரலாமென்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். நீர்வீழ்ச்சி, நான், இதுதான் சொர்க்கமோ என்று தோன்றியது.
இந்த அழகுதான் இறைவனோ - தன்னை மறந்து தன் நாமம் கெட்டு... இரண்டு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. பிறகு மெதுவாக நடந்து வந்தேன். கையில் எடுத்து வந்த உணவைச் சாப்பிட்டேன். கை கழுவ இடம் இருக்குமா... அதோ "டாய்லெட்' என்று எழுதியுள்ளதே. போனால்... கூட்டமே இல்லாத அந்த இடத்தில் சுத்தமான அறை, வாளியில் சுத்தமான நீர். யார் இதைக் கவனித்துக் கொள்கிறார்கள்? வனதேவதைகளோ? எப்படி இப்படி ஒரு சுத்தம்? நம் நாட்டில் சுற்றுலா இடங்களில் இந்த வசதி இருக்காது. இருந்தால் ஓர் இற்றுப்போன கதவு பொருந்திய அறை இருக்கும். எங்கே அந்த அறை உள்ளது என்று தேட வேண்டும். ""கண்களே நீங்கள் தேடி சிரமப்படாதீர்கள்'' என்று "மூக்கு' உதவிக்கு வரும். ஏன் நமக்கு இந்த வசதியும் சுத்தமும் தேவை என்று தோன்றவில்லை? இல்லை கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கு வேண்டுமானாலும் நாம் வசதியாக இருக்கலாம் என்ற எண்ணமா? வெட்கம், கூச்சம் வேண்டாமா ஐயா, சுத்தம் சுகாதாரம்? ஒன்றும் தேவை இல்லை.
நம் தாய்நாடு பொறுமை மிக்கவள் பொறுத்துக்கொள்வாள். நாய்க்கும் காக்கைக்கும் இருக்கும் உரிமை மனிதனுக்கும் இருக்கட்டுமே என்கிறோமா? வேறு எந்த நாட்டிலும் இந்த அநாகரிகம் நடப்பதாகத் தெரியவில்லை. இப்பொழுது அரசு விளம்பரம் வேறு. மணப்பெண்
சொல்கிறாளாம் - வீட்டில் "இந்த அறை' இல்லாவிடில் திருமணம் நடக்காது என்று! வருத்தமாக இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். கி. ராஜநாராயணன் எழுதியது என்று நினைவு. "கரிசல் மண்' என்று. அதில் ஒரு "பொக்கை வாய் கிழவர்' கிராமத்திற்கு வருவார். வந்து இந்த விஷயத்தில் எப்படி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வார். அவரைத்தான் நாம் "அக்டோபர் இரண்டு ' என்ற தேதிக்குள் அடைத்து விட்டோமே! அவர் சொன்னதையா நினைவில்கொள்ளப் போகிறோம்?
அடுத்து கொரியாவில் சியோல் நகரத்திற்கு வருவோம். பெண் நீதிபதிகள் மாநாடு. குடும்பத் தலைவியின் பணிக்குப் பொருளாதார மதிப்பு (ஆம் - அதற்கு மதிப்பு உண்டு) என்பதுபற்றிப் பேசினேன். மாலை ஹோட்டல் வெளியே தெருவோரமாக நடந்து போனேன். சாலை ஓரத்தில் அமர ஓர் இடம் கிடைத்தது. அங்கே உட்கார்ந்து போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருந்தேன். அருகே ஒரு சுரங்க நடைபாதை, கீழே செல்லும் படிகள், இருபக்கம் பளபளவென்று உலோகத்தாலான கைப்பிடிகள், ஒரு பெண் தொழிலாளர். நீங்கள் நம்ப மாட்டீர்கள். அரை மணிக்கொரு முறை துணியை வைத்து கைப்பிடிகளைத் துடைத்து பாலிஷ் போட்டார். இதற்காகவே இரண்டு மணி நேரம் அங்கு உட்கார்ந்தேன். ஹோட்டலில் சாப்பாடு கிடையாது என்றாலும் பரவாயில்லை என்று. இப்படியொரு கர்மயோகியைக் காண்பது அபூர்வம்!
எந்த மேலதிகாரியும் அவரைக் கண்காணிக்கவில்லை. அவரே அவருடைய மனச்சாட்சிக்காக, ஆத்ம திருப்திக்காக தன் பணியைச் செய்தார். என் வேலையை என்னைவிடச் சிறப்பாக யாரும் செய்யக்கூடாது. இது எனக்காக நான் செய்யும் செயல், என் பணியிடத்திற்கு நான் செலுத்தும் மரியாதை, என் நாட்டிற்கு நான் செய்யும் அர்ப்பணம். மாறாக, இந்த வேலையில் எனக்கு என்ன சலுகைகள் கிடைக்கும், எத்தனை விதமான விடுப்புகள் எடுக்கலாம், அந்த விடுப்புகள்போக, மிச்சம் மீதி உள்ள நாட்களில் வேலை பார்த்தால் போதும் என்பது சரியல்ல. நியாயம், தர்மம் என்று பார்க்க வேண்டாம். வாங்குகிறோமே சம்பளம் - அதற்குண்டான உழைப்பைக் கொடுக்க வேண்டாமா? என் வேலையின் தரத்தில் ஏனோதானோவிற்கு இடம் இல்லை. நம் சம்பளத்தில் அநியாயமாக ஒரு ரூபாய் பிடித்தம் செய்தாலும் கேட்கும் உரிமை உள்ளது. உரிமையின் மறுபக்கம் கடமை. அப்பொழுது நம் உழைப்பில் மட்டும் எப்படி ஒரு குந்துமணியளவிற்குக்கூட மாற்றுக் குறையலாம்?
நம் அரசியலமைப்புச் சாசனத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற அத்தியாயம் 1977-இல் சேர்க்கப்பட்டது. கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன். அதில் ஒரு ஷரத்து நம் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. தனியாகவோ கூட்டாகவோ நாம் உழைக்கும் உழைப்பு, நம் நாட்டிற்கு உயர்வையும் நம் நாட்டின் சாதனையையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்கிறது.
இதற்கு விதிவிலக்கு இல்லை. ஒவ்வொருவரும் என்கிறது. அந்த கொரியா நாட்டுப் பெண்மணி அடிப்படைக் கடமையுணர்வு எப்படி இருக்க வேண்டுமென்று கைப்பிடியைத் துடைத்தே காண்பித்தார்.
கடைசியாக, நம் அண்டை நாடு பாகிஸ்தானுக்கு வருவோம். அங்கு நான் சென்றபொழுது நான் மட்டும்தான் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று முகத்தில் எழுதி ஒட்டிக்கொண்டு சென்றேன். அகப்பட்டாள் ஏமாளி என்று அவர்கள் நினைக்கவில்லை. குட்டிக்கடையிலிருந்து பெரிய அங்காடிவரை எனக்கு வரவேற்பு. ""ஆப் ஹமாரா மெஹமான் ஹை'' நீங்கள் எங்கள் விருந்தினர் (அதிதி)''. எங்களுடைய மதிப்பிற்குரியவர். எங்களுக்கு லாபமே வேண்டாம். குறைந்த விலை கொடுங்கள் என்றார்கள், நம் நாட்டைப் பார்க்க வேண்டும் என்றார்கள். தெருவில் நான் செல்லும்பொழுது ""மாஷா அல்லாஹ்'' என்று திருஷ்டி கழிப்பதுபோல செய்வார்கள். நான் யார்? என்னால் அவர்களுக்கு ஒரு பயனுமில்லை. பின் ஏன் இந்த அன்புப் பிரவாகம்? ஏனென்றால் நான் அவர்கள் மெஹ்மான். மொழி தெரியாதவளை மொட்டையடிக்கலாம் என்று யாரும் நினைக்கவில்லை.
இவர்கள் இப்படியென்றால், அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் ஒருநாள் மாலை, "எங்கு போகப் போகிறீர்கள்?' என்று கேட்டார். "கடற்கரைக்கு' என்றோம். தான் கொண்டு விடுவதாகச் சொன்னார். பெரிய வண்டி. சீருடையணிந்த ஓட்டுநர் எல்லாம் கிடையாது. அவரே ஓட்டிச்சென்று எங்களைக் கொண்டுவிட்டார். ஆம் - உச்ச நீதிமன்ற நீதிபதி.
பிறகு எவ்வளவு நேரம் கழித்து வரவேண்டும் என்று கேட்டார். ""வேண்டாம் ஸார். இதற்கே மூர்ச்சை போடாமல் எப்படி இருப்பது என்று முழிக்கிறோம், இதற்கு மேல் தாங்காது'' என்று மறுத்துவிட்டோம். இவ்வளவும் ஏன்? நம் நாட்டிற்கு வந்தவர் என்ற எண்ணம் ஏழையிலிருந்து உயர் பதவியிலிருப்பவர் வரை.
ஒரு சுற்று வந்துவிட்டோம். முதலில் கேட்ட கேள்விக்கு இதோ பதில். நம் நாட்டின் சிறப்பு குணம். ""எங்கள் வழி தனி வழி''; ஆனால், மாறலாம் இல்லையா'' ஒவ்வொரு நாட்டின் சிறப்புக் குணத்தையும் எடுத்துக் கொள்ளலாமே! தேனீ போல... நமக்காக... நம் தாய்நாட்டிற்காக... ப்ளீஸ்!
காலணிக் கடை...
By பிரபா ஸ்ரீதேவன்
First Published : 16 July 2013 04:20 AM IST
""அவர்கள் காலணிகளை அணிந்து நீ நடந்து பார்'' என்று கனடா நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கிளேர் லூரூ டூபே கூறுவார்.
"அப்படி என்றால் என்ன? "உன்னிடம் வந்து நியாயம் கேட்பவரின் கூற்றை நீ உன் அனுபவங்களை வைத்து அணுகாதே, அவருடைய அனுபவம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்; அப்பொழுதுதான் நல்ல முறையில் தீர்ப்பளிக்க முடியும்' என்று பொருள். இந்த அணுகுமுறையை நாம் அனைவரும் நம் சமூகப் பரிமாற்றங்களில் கடைபிடித்தால் மனித நேயம் தழைக்கும்.
பிரெஞ்சு நாட்டு ராணி மேரி அன்டாய்நெட், அந்நாட்டு மக்கள் ரொட்டி இல்லாமல் பட்டினியால் தவிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும், "ஏன்? கேக் சாப்பிடட்டுமே?'' என்றாராம். அரண்மனை சொகுசும் செüகரியமும் மட்டுமே அறிந்தவருக்கு வெளியே வறுமையும் சோகமும் இருப்பது தெரியவில்லை. வந்தது புரட்சி, வீழ்ந்தது மன்னராட்சி; பிறந்தன ஜனநாயகத்தின் உயிர்ப்புச் சொற்கள் ""சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம்''.
அன்று பிரெஞ்சு நாட்டுப் பிரபுக்களுக்கு ஏழைகளின் துயரம் புரியவில்லை.
காலணி கடைக்குச் செல்வோமா? இன்றுபோல நினைவுக்கு வருகிறது. "இந்திரா காந்தி சுடப்பட்டார்' என்ற செய்தி வந்த நேரம். ""கொன்றவர் முஸ்லிமாக இருக்கக்கூடாது'' என்று என்னருகே ஒரு குரல் கேட்டது. படித்த, செல்வாக்கு படைத்த அவர் இஸ்லாமியர். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று திகைத்தேன். பின் வடக்கிலும் ஏன், இங்கே கோவையிலும் நடந்த "சீக்கியர் படுகொலை' என்ற கோர தாண்டவம் அவர் அப்படிக் கூறியது ஏன் என்பதை எனக்குப் புரியவைத்தது.
சிறுபான்மையினருக்குத்தான் அது புரியும். மதம் சார்ந்த சிறுபான்மையினராக இருக்கலாம். மொழி, இனம், ஜாதி அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கலாம். ஏன் ஆண்பால், பெண்பால் என்றால் - பெண்கள்தான் சிறுபான்மையினர். ஒரு நொடியில் தாங்கள் தனிப்பட்டுப் போவோம் என்று தெரியும் அவர்களுக்கு. மற்றவருக்குத் தெரியாது. ஏன் என்றால் அவர்களுக்கு எண்ணிக்கையின் பலம் உண்டு.
இது போலவே இன்னொரு நிகழ்வு - கோவை குண்டுவெடிப்பு வழக்கின் மேல்முறையீடு; சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து 9 வாரங்கள் விசாரணை நடந்தது. சம்பவம் நடந்த இடங்கள், பிணங்கள், இன்னும் பலவற்றைப் போலீஸôர் "விடியோ' படம் எடுத்திருந்தார்கள். அது வழக்கின் முக்கிய ஆவணம். இந்தப் படத்தை, விசாரணை செய்த இரண்டு நீதிபதிகளும் பார்த்தார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 163 பேர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சிகள், ஆவணங்கள்.
அந்தத் தீர்ப்பின் சில வாக்கியங்கள், ""அந்த சாட்சிகளில் ஒருவர் சொன்னார், பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று இரவில் பல இளம் இஸ்லாமிய ஆண்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் அவர்களை 8 அல்லது 9 பேர்களாக நிற்கவைத்து புகைப்படம் எடுத்திருந்தனர். சந்தேகத்தின்பேரில் அல்ல, அவர்கள் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மட்டுமே. அவர்களில் ஒருவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அல்ல. நினைத்துப் பாருங்கள் - எவ்வளவு கூனிக்குறுகிப் போயிருப்பார்கள்?''.
""நான் குற்றம் செய்யவில்லையே'' என்று அன்று நீங்கள் தில்லியிலோ கோவையிலோ கத்தியிருந்தால்கூட யார் காதிலும் விழுந்திருக்காது. இது ஆணிகள் பொருந்திய காலணி.
அடுத்த ஜோடிக் காலணியைப் பார்ப்போம். இருபது ஆண்டுகள் முன்னிருக்கும். நான் நீதிபதி பதவி ஏற்பதற்கு முன்னால் கியூபா நாட்டு எழுத்தாளர் மரியா ஐரீன் போஃர்னஸ் எழுதிய கியூபா புரட்சி பற்றிய நாடகத்தில் பங்கேற்றேன். ஐந்து கதாபாத்திரங்கள். கணவன், மனைவி, கணவனின் நண்பன், வீட்டில் உதவி செய்யும் பெண்மணி, வீட்டில் அடைக்கலம் புகுந்த இளம்பெண். நான் அந்த வீட்டில் வேலைசெய்யும் பெண்மணி. ஒத்திகை நடக்கும் அந்த சில மணி நேரங்களில் நான் நின்றுகொண்டும் வேலை செய்துகொண்டும் இருப்பேன். எஜமானி நாற்காலியில் அமர்ந்திருப்பார் - வேலை செய்யாமல். அந்த இரண்டு மணி நேரத்துற்குள்ளாகவே எனக்கு எரிச்சல் வரும், "நான் மட்டும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்' என்று. எவ்வளவு மணி நேரங்கள், நாள்கள், வருடங்கள் நமக்கு வீட்டில் உதவி செய்பவர்கள் இதையே செய்கிறார்கள்? அன்றிலிருந்து நான் "வேலையாள்' என்று சொல்வதில்லை. நாம் செய்ய வேண்டிய அலுவல்களை நமக்காகச் செய்து உதவி செய்கிறார்கள். நாம் நன்றிக் கடனல்லவா செலுத்த வேண்டும்? அதை விடுத்து அவர்களைத் திட்டி, கோபித்து சரியாகக்கூட ஊதியம் கொடுக்காமல்... ஒரு நாள் வெளியே சாப்பிட்டால் ஹோட்டல் பில்லைப் பாருங்கள். அவர்களுடைய மாத ஊதியத்தை ஒப்பிடுங்கள். அந்தக் காலணி எப்படி இருக்கிறது? கடிக்கிறதா?
அடுத்த ஜோடிக் காலணி திருநங்கைகளுடையது. திருநங்கைகள் கூடி தில்லியில் ஒரு பொது விசாரணை நடந்தது. அதில் நடுவர்களில் ஒருவராகப் பங்கேற்றேன். சோகமயமான வாழ்க்கை. ஹரியாணாவிலிருந்து வந்த ஒரு திருநங்கை கவிதையாக ஒரு கேள்வி கேட்டார். ""இரவுமில்லாத, பகலுமில்லாத மாலைப்பொழுது அழகு என்கிறீர்களே? அப்படித்தானே நாங்களும்? எங்களை மட்டும் ஏன் வெறுக்கிறீர்கள்?''. அவர்களுடைய உடல் "ஆண்' என்று அடையாளம் காட்டும். உள்ளமோ நான் - "பெண்' "பெண்' - என்று கதறும். எப்படிப்பட்ட துயரம், நினைத்துப் பாருங்கள். எவ்வளவு படிவங்கள் நாம் பூர்த்தி செய்கிறோம். ஆண்/பெண் என்று குறிப்பிடும் இடத்தில் தயக்கம் இல்லாமல் நாம் ஒன்றைக் குறிப்பிடுகிறோம். அந்த இடத்தில் அவர்களுக்குப் பேனா தடுமாறுகிறது. ""நான் ஆணா, பெண்ணா? எங்கு குறியிடுவது?'' என்ற கேள்வி எழுகிறது. ஏதோ ஒன்றில் குறியிடுவதுதானே என்று அலட்சியமாக சொல்லாதீர்கள். இது ""நான் யார்'' என்பது பற்றியது. இதில் ""ஏதோ''வெல்லாம் கிடையாது. அதுபோலவே ஆண், பெண் என்று அடையாளம் காட்டும் பொதுக் கழிவறைகள். ஆண் பிரிவுக்குச் சென்றால் இவர்களுக்குக் கிடைக்கும் பரிகாசம், ஏளனம். பெண்கள் பிரிவுக்குச் செல்லமுடியாது. பின்?
சில வருடங்களுக்கு முன்பு நடந்த கதையல்ல, நிஜம். ஒரு திருநங்கைக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவரை ஆண்கள் சிறைக்கு அனுப்பலாமென்றால் அங்கு பரிகாசம் மட்டுமல்ல பாலியல் வன்முறையும் பரிசாகக் கிடைக்கும். பெண் குற்றவாளிகளோ "இங்கே அனுப்பாதீர்கள்' என்று சொல்லிவிட்டனர். மனிதநேயமுள்ள அந்த சிறைக்காவலாளர் தன் அரசு இருப்பிடத்தில் இருக்கும் "அவுட்-ஹெüசில்' அவரைச் சிறை வைத்தார். இது அந்த அதிகாரியின் மனிதாபிமானத்தின் வெளிப்பாடு. அதிகாரியிடம் காணப்பட்ட அந்தப் புரிதல் இன்றும்கூட மக்களிடம் பரவியதாகத் தெரியவில்லை. இந்தக் காலணிக்குள்ளே கால் செல்லவில்லை!
அடுத்தது ஒரு பயங்கரம். நான் வழக்கறிஞராக இருந்த காலத்தில் ஒரு பெண், குடும்ப நீதிமன்ற வழக்கு சம்பந்தமாக என்னைச் சந்தித்தார். வயது இருபது - இருபத்திரண்டு இருக்கும். பொதுவாக எல்லாக் கட்சிக்காரர்களும் தங்கள் வழக்கைப் பற்றி ஒரு மணி நேரம் சொல்வார்கள் என்றால், கசந்துபோன தம்பதிகள் பத்து மணி நேரம் சொல்வார்கள். அதாவது, ஒரு சம்பவம் விடாது எல்லாவற்றையும் கொட்டுவார்கள். எல்லா கசப்பும் உரைப்பும் வெளியே வரும். முதலில் நாம் பொறுமையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். பிறகுதான் வழக்கின் அணுகுமுறை, தீர்வைப்பற்றி ஆலோசிக்க வேண்டும். அவள் வித்தியாசமாக இருந்தாள். அமைதியாக - சலனமே இல்லாமல், குரலில் ஏற்றத்தாழ்வே இல்லாமல் ஒப்பிப்பது போல சொல்லிக்கொண்டே வந்தாள். உணர்ச்சி இல்லை, முகபாவத்தில் மாற்றம் இல்லை.
""சாப்பாடு சரியா இல்லைன்னா அவர் என்ன செய்வார் தெரியுமா?''
""என்ன?''
""இரவில் வீட்டுக்குள் விடமாட்டார், வெளியே நாய் படுக்கும் இடத்தில்தான்''.
""என்ன?'' - முந்தைய என்னவிற்கும் இந்த என்னவிற்கும் பல காதம் வித்தியாசம். "அலறினேன்' என்று கூட சொல்லலாம்.
""நாய் படுக்கும் இடம் மேடம்''.
""கோபம் வந்ததா உங்களுக்கு?''
""வரும் மேடம்''. இதுவும் அதே குரலில்.
""பொய் சொல்கிறாரோ? இப்படி ஒரு பெண் இருக்க முடியுமா? இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா?''
அப்பொழுதுதான் அந்தக் கைகளைப் பார்த்தேன். அந்தக் கைகளிடையே ஒரு கைக்குட்டை பறித்து, கிழிக்கப்பட்டு செத்துக் கொண்டிருந்தது. அவர் சொல்வது உண்மை. எவ்வளவு கனவுகளுடன் அவர் திருமணம் செய்துகொண்டிருப்பார்? நாயுடன் படுக்கவா பெற்றோர் அவரைக் கட்டிக்கொடுத்தனர்? அந்தக் கணவனுக்கு அம்மா இருந்தாள், அக்கா - தங்கைகள்கூட இருந்தார்கள். ஒருவருக்குமா இதுமனித உரிமைப் பறிப்பு என்று தோன்றவில்லை? இந்தக் காலணிகள் எரிகின்றனவா?
அடுத்த காலணி உங்களுக்குக் கொள்ளாது, சிறியவை. குழந்தைத் தொழிலாளர் பலரை விடுவித்து சென்னைக்கு அழைத்துவந்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார்கள். இந்தக் கொடுமை ஒழியவேண்டும் என்று அந்தக் குழந்தைகள் எல்லோரும் கொடி தூக்கினார்கள். பொதுக்கூட்டங்கள் நடத்தி இந்த அவலங்களை ஒழிக்க முடியுமென்றால் நம் நாடு சுவர்க்க பூமியாகியிருக்கும். அவைகள் ஒழிக்கப்படுவதில்லை. இருந்தும் ஒரு சின்ன நம்பிக்கை. இந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பரிமாறப்படும் எண்ண விதைகளாவது விளைநிலத்தில் விழாதா என்று? நப்பாசை என்று கூடச் சொல்லலாம். அங்கே பல குழந்தைத் தொழிலாளர்கள்; சிலருடன் பேச முடிந்தது.
அங்கேதான் ஹஸீனாவைச் சந்தித்தேன். ஊதா நிற உடை. ""ஹஸீனாவுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டேன். ""ஒரு பலூன் அம்மா; ஒரு பலூன் வேண்டும். அதைப் பிடித்துக்கொண்டு உயர உயரப் பறக்கணும்''.
ஏழைக் குழந்தைத் தொழிலாளர் என்றாலும் கனவு காணும் உரிமை ஹஸீனாவுக்கும் உண்டு. ஹஸீனாவுக்கு பெற்றோர்கள் நிலாச்சோறு ஊட்டியிருப்பார்களா? ஹஸீனாவின் பாட்டி, "ஒரே ஒரு ஊரிலே' கதை சொல்லியிருப்பாரா? பிறந்த நாள் கொண்டாடியிருப்பாரா? அட ஒரு மணிநேரம் பாண்டி விளையாட்டுதான் ஹஸீனா ஆடியிருப்பாரா?
காலை 4 மணிக்குத் தொழிற்சாலை வண்டி வந்து அழைத்துச் சென்றால் இரவுதான் வீடு என்று விதிக்கப்பட்டிருக்கும் ஹஸீனாவுக்கு அதற்கெல்லாம் எங்கே நேரம்? ஒரு பலூனைப் பிடித்துக்கொண்டு பறந்தால் இந்தச் சிறையிலிருந்து பறந்துவிடலாம் என்று ஹஸீனாவுக்குத் தோன்றியதோ?
நமக்கே தெரியும், தொழிற்சாலைகளில், வீடுகளில், ஹோட்டல்களில் எவ்வளவு குழந்தைத் தொழிலாளர்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும் உரிமைகள் ஹஸீனா போன்ற குழந்தைகளுக்கும் உண்டு. வழக்கமான கதைதான்; சட்டமிருக்கிறது, சமூகம் மாறவில்லை. ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தமும் இருக்கிறது. நம் வீட்டுக்குழந்தைகள் போலத்தானே ஹஸீனாவும் மற்றவர்களும்; ஆனால் நாம் ஏன் அவர்களைக் குழந்தைகளாக இருக்கவிடவில்லை?
காலணிக்கடை இதுவே; இன்னும் பல காலணிகள் - சில குத்தும், சில கடிக்கும். ஆனால் போட்டுப் பார்த்தோமானால் மெதுவாகப் புரியும் - கடையில் இருக்கும் காலணிகள் எல்லாமும் காலுக்கு இதமாக மாறவேண்டும் என்று!
கட்டுரையாளர்: உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி
Subscribe to:
Posts (Atom)