WELCOME

ASSALAMU ALAIKUM WR WB...

Sunday, May 10, 2020

இரவின் ஸலவாத்து, ஒரு இதமான சுகானுபவம்

அஸ்ஸலாமு அலைக்கும்.


அது ஒரு இனிமையான இரவு.
ஒளிமிகு மதீனா நகரில் வந்திறங்கி விட்டேன்.

இஷாவுடைய தொழுகை முடிந்து சில மணி நேரங்கள் கடந்திருக்க வேண்டும். மதீனத்து தெருக்கள் யாவும் வழக்கத்திற்கு மாற்றமாக,
வெறிச்சோடிக் கிடந்தன.

அடடா, மதீனா என்ற வார்த்தைக்குள்ளும், அதன் தெருக்கள் என்ற
சொல்லினுள்ளும்
எத்தனை விதமான
மகத்துவங்கள் அடங்கி இருக்கின்றன!

இந்த வீதிகளின் வீரியத்தை எவரால்தான் விவரித்துச் சொல்ல இயலும்!

ஆம். இந்த மண், மனித குல மாணிக்கத்தின் பாதங்களை சுமார் 10 ஆண்டுகள் தன் மடி மீது சுமந்த பெருமைக்குச் சொந்தமானதல்லவா!

பூலோகத்திற்கு வந்துதித்த அனைத்து நபிமார்களுக்கும் தலைவர், நம் பூமான் நபிகள் தேர்ந்தெடுத்த மண்ணல்லவா இது.

தாயிஃப் நகரத்தில் கற்களால் காயப்படுத்தப்பட்ட தாஹா நபியின் கால்களை, இந்த மதீனத்து மணல் வீதிகள் தானே மருந்திட்டு சுகப்படுத்தின.

"புஷ்பங்களின் மகரந்தமாம் மதினப் புழுதியில், நான் புரள வேண்டும் உருள வேண்டும் போலிருக்குதே"

என்ற பாடல் வரிகள் நினைவில் சுழன்று கொண்டிருந்தன.

மறக்க முடியாத எத்தனையோ
வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு இந்த
மாண்புமிகு வீதிகளே அத்தாட்சி.

நடந்த வண்ணமே கடந்தகால நினைவுகளை மனம் அசை போடத் தொடங்கியது.

இந்த மண்மீது நிகழ்ந்திருக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளை இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.
மண்ணுலக முடிவு நாள் வரும்வரைக்கும், இல்லை இல்லை
விண்ணுலக வாழ்வு தொடரும் வரைக்கும் இந்த வரலாறுக்கு ஒரு போதும் முடிவுரை எழுதி விட முடியாது.

ஒரு மதிய வேளை சம்பவம், நினைவை விட்டும் ஒருபோதும் நீங்கப் போவதில்லை

அன்று உச்சிவேளை.
பாலைவன வெப்பமும், அனல் தெறிக்கும் காற்றும்
மதீனத்து மண்ணைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது.

யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. ஆயினும், இயற்கைக்கு மாற்றமாக ஒரு உருவம், தகிக்கும் வெயிலில் தன்னந்தனியே நடக்கத் தொடங்கியது.

அதேநேரம் மற்றொரு உருவமும் வீட்டை விட்டு வெளியில் கிளம்புகிறது. எதேச்சையாக நடந்தது இருவரின் சந்திப்பும்.

அவர்கள் வேறு யாருமல்ல. முதலாவது புறப்பட்டவர் அண்ணலாரின் அன்புக்குரிய தோழர் உமர். இரண்டாமவர் அருமை நபியின் ஆருயிர் நண்பர் அபுபக்கர்.

ஒருவரை ஒருவர் சந்தித்து சலாம் சொல்லிய பின் உரையாடல் துவங்கியது. உமரைப் பார்த்து அபூபக்கர் கேட்ட கேள்வி, இந்த உச்சி வெயிலில் உங்களை வெளியில் வரச் செய்தது எது ? உமரிடம் இருந்து வந்தது ஒற்றை வார்த்தையில் பதில் "பசி". அதன் உச்சம் வீட்டில் என்னை அமர அனுமதிக்கவில்லை.
அடுத்த கேள்வி உமரிடம் இருந்து புறப்பட்டது. தாங்கள் இக்கொடும் வெயிலில் வெளியில் வரக் காரணம் என்னவோ?
அபூபக்கரின் பதில், உங்களை வெளியில் வரச் செய்த அதே பசி தான் என்னையும் வெளியேற வைத்துவிட்டது.

நபிக்குப் பிரியமான, இறைவனுக்கு நெருக்கமான இருவரும், ஒன்றாக இதே மஸ்ஜிதுந் நபவியை நோக்கி நடந்துகொண்டிருக்க, தங்கள் கண்களுக்கு எதிரிலேயே அண்ணலாரும் வீதிக்கு வருவதை ஆச்சரியத்துடன் இருவரும் பார்க்கிறார்கள். அவர்களை நோக்கிப் புன்னகைத்த அண்ணலார், எது உங்களை இந்த உச்சி வேளையில் வெளியேற வைத்தது. அல்லாஹ்வின் தூதரே, பசியின் கொடுமையால் வீட்டினுள் அமர்ந்திருக்க முடியாமல் வீதிக்கு வந்து விட்டோம்.

எங்களின் உயிரினும் மேலான நபியே தாங்கள் இந்நேரத்தில் வெளியே வரக் காரணம் என்ன என்பதை நாங்கள் அறிந்து கொள்ளலாமா ? அன்பு நபியிடம் இருந்து வந்த பதில். எந்தப் பசி உங்களை வெளியில் வரச் செய்ததோ அதே பசி தான் என்னையும் வெளியேற வைத்திருக்கிறது.

இதே வீதியில்தான் மூவரும், தோழர் அபூ அய்யூப் அன்சாரி அவர்களின் வீட்டிற்கு நடந்து சென்றார்கள் அங்கு அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது என்று வரலாறு தொடர்கிறது.

இன்னும் இதுபோன்ற எத்தனையோ எத்தனை சம்பவங்களை இந்த வீதிகளின் ஒவ்வொரு மண்ணும், கல்லும், தூசியும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

தன்னந்தனியாக அடி மீது அடி எடுத்து வைத்து, அமைதியாக மஸ்ஜிதுந் நபவியை முன்னோக்கியவனாக
நடக்கத் தொடங்கினேன்.

நாலாபக்கமும் பூரண அமைதியோ அமைதி.

மெல்ல வீசியது ஜில்லென்ற காற்று.

"தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு,
கொஞ்சம் நில்லு,
எங்கள் திரு நபியிடம் போய் சொல்லு, சலாம் சொல்லு, சலாம் சொல்லு,"

என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.

ஆம், எண்ணிலடங்கா தியாகங்களை நமக்காகச் செய்து விட்டு, இந்த மண்ணிலடங்கியிருக்கும் மாநபிக்கு நாம் என்ன பரிகாரம் செலுத்திட முடியும்.

வெகுதொலைவில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மினாராக்கள், மாநபிக்கு ஸலாமும் ஸலவாத்தும் சொல்ல என்னை வா வா என்று அழைப்பது போன்று இருந்தது.

மினாராக்களின் நடுவில்,
நடுநாயகமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது பச்சை நிற கும்பா.

அது வெறும் பச்சை நிற கும்பா மட்டுமன்று. அதன் கீழே ஆயிரமாயிரம் அற்புதங்கள் அல்லவா பொதிந்திருக்கின்றன.!

யாரைப் படைக்கவில்லை என்றால், இந்த வானத்தையும், பூமியையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்திருக்க மாட்டேன் என்று இறைவன் கூறுகின்றானோ,

மேலும், படைப்புகளிலேயே சிறந்த படைப்பாகிய, நபிமார்கள் யாவருக்கும் தலைவராகிய, நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் இடமல்லவா!.

"மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே
யா ரசூலுல்லாஹ்
உயர் மறையாம் ஃபுர்கான் வாங்கித் தந்தோரே யாரசூலல்லாஹ்"

மனித வாழ்வினில் இனிமை சேர்த்தோரே யாரசூலல்லாஹ், உங்கள் மகிமை சொல்லில் அடங்குவதில்லை யாரசூலல்லாஹ்"

அக்காலத்துப் பாடல் வரிகளின் ஒவ்வொரு எழுத்திலும் அண்ணலாரின் மீதான அன்பு ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்.

"மதீனத்திலே இன்று உறங்கும் நபி, அன்னை மடியினிலே அன்று உறங்கவில்லை"

என்று தன் தாயை இழந்து தத்தளித்த பிஞ்சுக் குழந்தை பெருமான் நபியின், நிலையை சோகத்தோடு பாடும் அந்தக் கவிஞரின் அற்புதமான வரிகள் என் காதுகளில் எதிரொலித்தது.

இந்த வீதிகளின் மண் மீது எத்தனை நன்மக்கள் நடந்திருக்க வேண்டும்.

காலடி எடுத்து வைக்க, எடுத்து வைக்க. நடுக்கமும பயமும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. எப்படிப்பட்ட புண்ணிய பூமி இது. கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமே.

"என்னாளும் அவர் நாமம் இயம்பாத கணமேது இறையில்ல பாங்கோசை பெருமான்"

"கை நகம் கண் தொட்டுக் கனிகின்ற சலவாத்தில் கஸ்தூரி மணம் கமழும் எம்மான், அவரைக் காணத் துடிக்கின்றேன் இந்நாள்"

உள்ளத்தை உருக்கி. உள்ளன்பை மேலோங்கச் செய்யும் உன்னத வரிகளுக்குச் சொந்தக்காரரான அந்தக் கவிஞர் பெருமானை எவ்வாறு வாழ்த்துவது என்றே தெரியவில்லை.

24 மணி நேரமும், வருடம் முழுவதும்
ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாங்கோசையில் பெருமானாரின் பெயர் சொல்லப்பட்டு கொண்டே இருப்பது எவ்வளவு பெரிய அற்புதம்.

நடந்து நடந்து அல்லாஹ்வுடைய நபியின் பள்ளி வாசலுக்கு அருகாமையில் வந்து விட்டேன்.

"ஜெகமது போற்றும் முஹம்மது நபியை சிந்தையில் வைத்தே தினம் தினம் பார்த்தேன்,
முகம்மதின் திருமுகம் ஒருதரம் கண்டால் முடித்துக் கொள்வேன் எந்தன் வாழ்வை ரவ்ளா ஷரீபிஃலே, ரசூல் முன்னிலே"

நாகூர் ஹனிபா அவர்கள் கணீரென்ற பாடும் இப்பாடல் வரிகள் கண்களை கொஞ்சம் கொஞ்சமாக நனைத்துக் கொண்டிருந்தது.

வலது காலை முன் வைத்து மஸ்ஜிதுந் நபவியின் மாளிகையின் உள்ளே புகுந்து விட்டேன். அல்லாஹ்வின் பிரியமான தூதருக்கு முன் அமர்ந்து ஸலவாத்தும் ஸலாமும் சொல்வதற்கு பணிவன்போடு நடையைத் தொடர்ந்தேன்.

இந்தப் புனிதப் பள்ளியில் அரங்கேறி இருந்த வரலாற்றுச் சம்பவங்கள் மனதில் நினைவலைகளாய் ஒன்றன்பின் ஒன்று வந்து போய்க் கொண்டிருந்தன.

வருடம் முழுவதும் ஜனப் பிரளயத்துக்குள் தத்தளித்துக் கொண்டிருககும், புனிதமிகு இந்தப் பள்ளி, இன்று யாருமின்றி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

ஸலவாத்தும் ஸலாமும் நாவில் தவழ்ந்தோட , நபிகளாருக்கு எதிரே கனத்த இதயத்தோடும் நனைந்த இமைகளோடும் சிறிது நேரம் சலாம் சொல்லியவனாக நின்றிருந்தேன்.


"நேருக்கு நேர் நின்று, நெஞ்சத்தில் முகம் வைத்து, நினைவும் உணர்வும் கொண்டு, நேசத்தால் சங்கமித்து, ஆரத்தழுவி எந்தன் ஆவி பிரிய வேண்டும், அண்ணல் நபிகளே ஷஹாதத் கூறவேண்டும்"

என்ற பாடல் , வரிகளை ஒரு ஆஷிக்கே ரசூலால் மட்டுமே எழுதி இருக்க முடியும். இறைத்தூதரின் பால் எத்தகைய காதல் இவருக்கு.


அன்னாருக்கு எதிரே அமர்ந்து,
வழக்கமாக ஓதும்
ஸலவாத்தை சொல்வதற்காக ஆயத்தமானேன்.


"இலட்சோப லட்ச உதடுகள் உங்களுக்கு முன்னால்
சலாத்தினைப் பொழிந்து கொண்டிருக்கின்றன. அவைகள் அனைத்திற்கும் உங்களின் ஒரே ஒரு மௌனமே பதிலாக இருந்து கொண்டிருக்கின்றது நாயகமே"

என்ற கவிதை வரிகள் என் நினைவில் மின்னல் கீற்றுக்களாய் பளிச்சென்று வந்து மறைந்தன.

ரவ்ளா ஷரீஃபுக்கு எதிரில் நான் மட்டுமே, சுற்றிலும் வேறு யாருமில்லை.

கண்களை மூடிய வனாக, சலவாத் ஓதுவதற்கு முன்பு ஆரம்பிக்கும் நிய்யத்தை நினைவுபடுத்திக் கொண்டேன்.

" நான் எனது கவனத்தை காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ரவ்ளா ஷரீஃபின் பக்கம் முன்னோக்கி வைக்கின்றேன்
அன்னாரின் அன்பின் அருள் என் கல்பில் இறங்கட்டுமாக."

அடுத்து கல்பு தனது பணியில் மும்முரமாக இயங்கத் தொடங்கியது.

"அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின் வஸீலத்தி
இலைக வ ஆலிஹி வஸல்லிம்."

No comments:

Post a Comment